மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தை ஒட்டிய கடைகளில் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சதி நடந்திருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் அறநிலையத்துறை முறையாக செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டின.
இதன் பின்னர் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது. இதை அடுத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவால் தங்கள் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முறையாக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ராஜநாகுலு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள இன்று அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்கிறோம் என உறுதிமொழி பத்திரம் அளிக்குமாறும், வாடகை பாக்கிகளை முறையாக கோவில் நிர்வாகத்திடம் அளிக்குமாறும் கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




