சென்னை: ரூ.20 நோட்டில் எழுதிக் கொடுத்து, ஓட்டுகளை அட்வான்ஸ் புக்கிங் செய்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் போலுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், இன்று தொகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள் மீது கல் வீசித் தாக்கினர்.
இந்தத் தாக்குத்லில் பெண் போலீஸ் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக சிலரும் கற்களை பதிலுக்கு வீசத் துவங்கினர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ரூ.20 கொடுத்து ஏமாற்றி விட்டதாக, சட்டமன்ற உறுப்பினரான டி.டி.வி.தினகரனை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொகுதிக்கு வந்த டிடிவி கார் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் போலீசார் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டது.
முன்னதாக, டிடிவி., ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்துக்கு வருவார் என்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகம் முன் தினகரன் ஆதரவாளர்களுடன் மதுசூதனன் ஆதரவு அதிமுக.,வினரும் அதிக அளவில் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து இப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுசூதனன் ஆதரவாளர்கள் டிடிவி ஆதரவாளர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியதாகவும், பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதில் இரு தரப்பைச் சேர்ந்த தொண்டர்களும் காயம் அடைந்தனர். எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமாவுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கல்வீச்சுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எனறு கூறினார். பின்னர் டி.டி.வி.தினகரனை காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் .




