சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்று, கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் மக்களிடம் வன்முறையைத் தூண்டிவிட முயன்ற சீமான் உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கூமாங்காடு கிராமத்திற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்றார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது அவர், அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து, கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டிப் பேசினார். ஆனால், அனுமதி பெறாமல் இவ்வாறு கூட்டம் நடத்தப் படுவதாகக் கூறி, அங்கு வந்த காவல்துறையினர், எட்டு வழிச்சாலைப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதியின்றி வரக் கூடாது என்று சீமானிடம் கூறினர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த சீமான், அண்மையில் அப்பகுதிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அனுமதி பெற்றுத்தான் வந்தாரா என கேள்வி எழுப்பினார். இதை அடுத்து காவல்துறையினருக்கும், சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அடுத்து சீமான் உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்த போலீசார்அவர்களை மல்லூர் காவல்நிலையம் கொண்டு சென்றனர். அங்கேவ்வைத்து சீமான் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில், வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் விவசாயிகளைத் தூண்டிவிட முயன்றதாகக் கூறப்படுகிறது.



