சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் குவிந்து வருவதைப் பார்த்தால், அவரது உடல் நிலை குறித்து பரவிய வதந்தி உண்மையாக இருக்குமோ என்று பலருக்கும் எண்ணத் தோன்றியிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் நலம் குறித்து பரவலாக செய்தீகள் உலவின. ஆனால் அவை வதந்தி என்று கூறி அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் மு.க.ஸ்டாலின். இதனிடையே, எதையும் தாங்கும் இதயம் என்றும், என் இதயத்தில் இடம் இருக்கிறது என்றும் அடிக்கடி கூறி வந்த கருணாநிதிக்கு, இதயம் மட்டுமே சரியாக இயங்குவதாகவும், மற்ற உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன, மல்டி ஆர்கன் ஃபெய்லியர் என்றும் கூறி சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின.
ஆனால் அவரது உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவரைக் காண யாரும் அணி திரண்டு வரவேண்டாம் என்றும், சிறு நீர்த் தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சல் என்றும் அது குணமாகிவிடும் என்றும், அவருக்கு வீட்டிலேயே 24 மணி நேரமும் உயர் ரக சிகிச்சை, மருத்துவமனையைப் போலவே மேற்கொள்ளப் படுவதாகவும் கூறியிருந்தது.
ஆயினும், கருணாநிதி மீது பாசம் வைத்த தொண்டர்கள் பலர் அவரது வீடு நோக்கி படை எடுக்கத் தொடங்கினர். வியாழக்கிழமை இரவு அவரது கோபாலபுரம் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே வெளியிடங்களுக்கு பணி நிமித்தமாக சென்றுள்ள காவலர்களை சென்னைக்குத் திரும்புமாறு காவல் துறையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கருணாநிதியின் வீட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஓடி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.
தி.மு.க தலைவர் கலைஞர் உடல் நலம் குறித்து நலம் விசாரிக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கோபாலபுரம் வந்திருந்தார். நடிகர் கமலஹாசனும் கருப்புச் சட்டையுடன் அங்கே வந்திருந்தார். எனவே இந்த கருப்புச் சட்டையுடன் கூடிய புகைப்படத்தைக் கண்ட பலருக்கும் எண்ணம் வித்தியாசமாகச் சென்றது. இதை உணர்ந்தோ என்னவோ, வெளியில் வந்த ஜி.கே.வாசன், கருணாநிதி நலமுடன் எழுந்து வருவார் என்று கூறி விட்டுச் சென்றார்.
இதனிடையே, கருணாநிதிக்கு மிகவும் பாசம் மிக்க மகளான கனிமொழி, வெள்ளி அன்று காலை 5.30 மணியளவில் சென்னைக்கு வந்து சேர்வார் என்று கூறப் படுகிறது. மேலும், மதுரையில் இருந்து கருணாநிதியின் இன்னொரு மகனான மு.க.அழகிரி சென்னைக்கு சாலை மார்க்கமாகவே பயணம் மேற்கொண்டுள்ளார்.
கருணாநிதியின் வீட்டில், மு.க.ஸ்டாலின், துரை.முருகன், கமலஹாசன் ஆகியோர் சோகமே வடிவாக அமர்ந்திருந்தனர்.
இத்தகைய செய்திகளால் கோபாலபுரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.






