சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப் படும் திமுக., தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். உடன் அமைச்சர்களும் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் சென்னை கோபாலபுரம் வீட்டில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக சளித் தொல்லை அதிகமாகி உள்ளதாகவும், லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரது உடல் நலம் குறித்து வதந்திகள் பரப்பப் பட்டன. இதனை அவரது மகன் மு.க.ஸ்டாலின் மறுத்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரம் வந்தார். அவருடன் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் வந்திருந்தனர். கோபாலபுரம் வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை தி.மு.க. மூத்த தலைவர்கள் துரைமுருகன், ஆர.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கூறுகையில், கருணாநிதி நலமாக உள்ளார். அவரை சந்தித்தது அரசியல் பண்பாடு, அவர் முழு குணமடைந்து நலம் பெறுவார் எனக் கூறினர்.
எடப்பாடி பழநிச்சாமி தற்போது முதலமைச்சர் அந்தஸ்த்தில் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியை அவர் இன்று இரவு நேரில் சந்திப்பதை தவிர்த்துவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.




