சென்னை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இது மிகவும் சோதனையான காலகட்டம். கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் ஓபிஎஸ். குறிப்பாக இரு தினங்களுக்கு முன்னர் அவர் மேற்கொண்ட தில்லி பயணமும், தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகளும் அவர் கொடுத்த பேட்டியும் அவரை மேலும் அதளபாதாளத்துக்குத் தள்ளியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தர்ம யுத்தம் நடத்தி அதன் மூலம் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கை உயர்த்திக் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் அவர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சமரசம் செய்து கொண்டு மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடித்தது முதலே பழைய செல்வாக்கை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
பதவிகள்இணைப்புக்குப் பிறகு பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கிடைத்தது போக, அவரது ஆதரவாளர்களுக்கு இதனால் பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இதனால் பதவி கேட்டு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பன்னீர்செல்வத்தை நச்சரித்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதைப் பெறலாம் என்ற நோக்கத்தில் தான் அவர் தில்லி சென்றார் என யூகங்களின் அடிப்படையில் செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
ஒரு எம்எல்ஏவாக இருந்த போது பிரதமர் மோடியை சந்திக்க முடிந்த பன்னீர் செல்வத்தால் துணை முதல்வர் அந்தஸ்துடன் தில்லி சென்ற போது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கூட சந்திக்க முடியவில்லை. இந்த வேதனையை பன்னீர்செல்வமும் உறுதி செய்தார்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி இதற்கு ஒரு உதாரணம். பிரதமர் மோடியின் முயற்சியால் தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று ஏற்கனவே பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனால் பாஜக மேலிடம் பன்னீர்செல்வம் மீது வருத்தத்தில் இருந்தது. தொடர்ந்து, சகோதரர் வைத்தியத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் உதவினார், அதற்கு நன்றி தெரிவிக்க வந்தேன் என்று அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தது, அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க ஒரு குழுவுடன் கருணாநிதி வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். இது கட்சியினரிடையே மேலும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.




