
மக்களிடையே சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் மிகுதியானாலும், தமிழகச் சூழலில் எனக்குத் தெரிந்து இங்கே பத்திரிகையாளர்கள் தாங்கள் நிரப்ப வேண்டிய வெற்றிடத்தைக் கண்டுகொள்வதே இல்லை. சமூக வலைதளங்களில் இதழலாளர்கள் தங்கள் தார்மிகக் கடமையில் இருந்து தெரிந்தோ தெரியாமலோ விலகியிருப்பதாகவே படுகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைய இதழியல் மாணவர்களுக்கு இன்று ஆன்லைன் ஜர்னலிசம் தொடர்பாக வகுப்பெடுத்தேன். மூன்றாவது ஆண்டாக வகுப்பு எடுப்பதில் இருந்து தெரிந்துகொண்ட ஆரோக்கியமான ஒரு விஷயம், ஒவ்வோர் ஆண்டும் ஜர்னலிஸம் படிக்க வரும் மாணவர்களிடம் ஆரம்பக் கட்டத்திலேயே போதுமான தெளிவு இருக்கிறது என்பதுதான். என் வகுப்பு லெக்சர் பாணியில் இல்லாமல் விவாதக் களமாகவே இருக்கும். (அதான் வரும்).
அந்த வகையில், இன்று தமிழகச் சூழலில் ஆன்லைன் ஜர்னலிஸம் தொடர்பான அடிப்படை குறித்த விவாதத்தின் முடிவில் ‘சமூக வலைதளங்களில் இதழாளர்களின் ரோல்’ குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். மாணவர்களில் சிலர் மட்டுமே நியூஸ் – வியூஸ் சார்ந்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இயங்கி வருவது புலப்பட்டது. இந்த இடத்தில்தான் சமகால பத்திரிகையாளர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களை பயன்படுத்தும் விதம் குறித்து கவனிக்க வேண்டியிருந்தது.
பத்திரிகையாளர்கள் தங்களது செய்திகளையும், செய்திக் கட்டுரையையும் கூட இங்கே சரிவர பகிராத நிலைதான் நீடிக்கிறது. அதைத் தாண்டி அவர்கள் ஒப்பீனியன் மேக்கர்களுக்கான ரோலையும் சரிவர செய்வது இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் இங்கே ஏற்படும் வெற்றிடத்தை அதிகம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நுனிப்புல் கருத்தாளர்களும், வார்த்தைகளால் வசீகரிக்கும் நெட்டிசன்களும் எளிதில் நிரப்பிக்கொள்கின்றனர்.
சமூக வலைதளத்தைப் பொறுத்தவரை தீவிரமாக இயங்கும் ஒப்பீனியன் மேக்கர்களின் எண்ணிக்கை தோராயமாக 10% ஆகவும், அவற்றால் தாக்கம் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 90% ஆகவும் இருக்கக் கூடும். குவாலிட்டியை கண்டுகொள்ளாமல் குவான்டிட்டி சார்ந்து இயங்கவல்ல அல்காரிதம் கொண்ட இணையத்தில், ஃபாலோயர்களின் எண்ணிக்கை மிகுதியாகக் கொண்ட நுனிப்புல் கருத்தாளர்களே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அபாயம் நீடிக்கிறது.
உதாரணமாக, ஒரு முக்கியச் செய்தியை உள்வாங்கும் மக்கள், அந்தச் செய்தியை எந்தக் கோணத்தில் அணுகுவது? எது சரி? எது தவறு? என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவது இயல்பு. இங்கே ஒப்பீனியன் மேக்கர்கள்தான் அந்தச் செய்தியை அணுகும் விதத்தை கருத்துகளாகப் பகிர்வர். அது மக்களுக்கு ஒருவித தெளிவுக்கு இட்டுச் செல்லும். ஆதி காலத்திலேயே சமூக வலைதளத்தில் கர்ச்சீஃப் போட்டு உட்கார்ந்து கொண்டதன் விளைவாகவும், பொழுதுபோக்காளராக வலம் வந்ததன் விளைவாகவும் 50 ஆயிரம் ஃபாலோயர்களை ஒருவர் கொண்டிருக்கிறார் என்றால், அவர் இடும் முக்கியச் செய்தி சார்ந்த மொக்கைக் கருத்துகளை, 50,000-ல் 5,000 பேர் ஏற்றுக்கொண்டாலே சிக்கலை ஏற்படுத்திவிடும்.
எனவேதான் பத்திரிகையாளர்கள் செய்திகளை மட்டுமின்றி, நியூஸ் சார்ந்த கச்சிதமான வியூஸ்களையும் பகிர்ந்து, ஒப்பீனியன் மேக்கர்களாகவும், மக்களின் நம்பகத்தன்மை மிக்க கருத்தாளராகவும் இங்கே செயல்பட வேண்டியது அவசியமாகிறது. தங்களது தெளிவான புரிதல், உண்மை நிலை, லாஜிக்கல் சார்ந்து கருத்துகளை உருவாக்கி, அவற்றை சமூக வலைதளங்களில் பகிரும் கடமை அவர்களுக்கு உண்டு.
‘பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டால் எக்ஸ்போஸ் ஆகிவிடுவார்கள்’, ‘சார்புத்தன்மை பகிரங்கமாகத் தெரிந்துவிடும்’ என்ற சாக்குப்போக்கெல்லாம் சொல்லத் தேவையில்லை. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையொட்டிய செய்திகளிலும், அரசியல் உள்ளிட்ட எந்த ஒரு விவகாரத்திலும் பாதிக்கப்படுவோரின் பக்கம் நின்று பேசுவதே நடுநிலை என்று எடுத்துக் கொள்ளலாம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, பிரச்சினைகளின் அடிப்படையில் சரியான கருத்துகளை முன்வைக்க முன்வரலாம். இதனால், பெரிதாக எந்த நெருக்குதலும் வர வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் இங்கே ஒப்பீனியன் மேக்கர்களாக செயல்படாதது, பல முக்கியப் பிரச்சினைகள் மக்கள் மத்தியில் மிக விரைவில் நீர்த்துப் போவதற்கும், மக்கள் தினம் தினம் வெவ்வேறு பரபரப்புகளை நாடிச் செல்வதற்குமான முக்கியக் காரணங்களில் ஒன்று என்பேன். எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவரோ, ஒரு சிறு குழுவோ உருவாக்கும் ஹேஷ்டேகுகள்தான் இங்கே டிரண்டாகின்றன. அதை பத்திரிகைகள் பின் தொடர்கின்றன. இன்று ட்ரெண்ட் ஆக வேண்டிய ஹேஷ்டேகை உருவாக்குவதிலும் பத்திரிகையாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதுதான் சமூகத்துக்கு நன்மை பயக்கும்.
தமிழ்ச் சூழலில் மேலிட நெருக்குதல்கள் பெரிதும் இல்லாத எடிட்டர், பொறுப்பாசியர் லெவலில் உள்ளவர்கள் கூட செல்ஃபி பகிர்வுக்கும், கவிதைப் பகிர்வுக்கும் மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது நம் சாபக்கேடு.
சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள் ஒப்பீனியன் மேக்கர்களாக வலம் வருவதை அவர்கள் பங்கு வகிக்கும் நிறுவனம் கண்டுகொள்ளாமல் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு கூடும் ஃபாலோயர்கள் மூலம் அதிகம் பயனடையப் போவதும் அந்த நிறுவனம்தான் என்பதையும் உணர வேண்டும்.
சுத்தி வளைத்தும் நேரடியாகவும் சொல்ல வருவது இதுதான்: சமூக வலைதளங்களில் ஒப்பீனியன் மேக்கர்களுக்கான வெற்றிடத்தை உரியவர்கள் நிரப்பாத பட்சத்தில், அந்த வெற்றிடம் வெத்தாளர்களால் எளிதில் நிரப்பப்பட்டுவிடும். அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
குறிப்பாக, அனுபவ அறிவும் சமூக அக்கறையும் கொண்ட பத்திரிகையாளர்கள் சமூக வலைதளத்தில் இயங்க முன்வர வேண்டும். இல்லையேல், உங்கள் இடங்களை எளிதில் வெற்று கவன ஈர்ப்புப் பத்திரிகையாளர்கள் கால்பற்றி, பிரபல பத்திரிகையாளராக உலா வரும் அபத்த ஆபத்தும் நேரிடலாம்.
அனுபவக் கட்டுரை: Saraa Subramaniam



