தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றால மலையிலுள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்ததால், வனத் துறையை கண்டித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.
குற்றால மலையில் பிரதான அருவிக்கு மேல்புறத்தில் மலைப் பாதையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது செண்பகா தேவி அம்மன் கோவில் மற்றும் செண்பகாதேவி அருவி. சில வருடங்களுக்கு முன்னர் இங்கே செல்வதற்கு வனத்துறை தடை விதித்தது.
சிற்றருவியைக் கடந்து மலைமீது ஏறிச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்த நிலையில், ஆடி அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் பூஜைகளை செய்வதற்காக பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தற்போது அதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இதனால் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து, பக்தர்கள், குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





