கரூர்: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று கரூரில் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறினார்.
கரூரில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டபின் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர்,
அதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்கச் சென்றார்.
தற்போது கட்சியின் தலைவர்கள் தான் சென்று விசாரித்து வருகின்றனர்.
அரசு சார்பில் யாரும் செல்லவில்லை.
அதே நேரம் தமிழுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாடுபட்ட மூத்த அரசியல்வாதி கருணாநிதி. தற்போது உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆற்று நீர் கடலுக்கும் செல்ல வேண்டும் என்பது இயற்கை விதி. அந்த அடிப்படையில் காவிரி நீர் தற்போது கடலுக்குச் செல்கிறது.
தமிழகத்தில் தற்போது தேவையான அணைகள் இருக்கின்றன. கூடுதல் தடுப்பணைகள் கட்ட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.
மக்கள் மனதில் அதிமுக உள்ளது. அண்மையில் நடந்த கருத்து கணிப்புகளும் அதிமுக விற்கு ஆதரவு பெருகி உள்ளதைக் காட்டுகிறது. ஜெயலலிதா இருந்தபோது 37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலில் 40-தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
ஜி.எஸ்.டி.தொடர்பாகவும், தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் போதெல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறோம்.
தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம். அதற்காக மத்திய அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம் என்று கூறினார் தம்பிதுரை.




