சென்னை: உடல் நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதிக்கு லண்டன் டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கலாமா அல்லது வெளிநாட்டுக்கே சென்று மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாமா என்ற ஆலோசனையை அழகிரி தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் திடீர் உடல் நலக் குறைவால் ரத்த அழுத்தம் குறைந்து அவதிப்பட்ட கருணாநிதிக்கு வீட்டிலேயே உயர் தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக ஸ்டாலினும், காவேரி மருத்துவமனையின் மருத்துவர் குழுவும் அறிவித்தது. ஆனால், அழகிரி இரவோடு இரவாக சென்னைக்கு திரும்பி குடும்ப உறுப்பினர்களுடன் பேசி, மருத்துவமனை சிகிச்சைக்கே வலியுறுத்தினார். அதன்படி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருணாநிதிக்கு மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்து வருகிறது.
இந்நிலையில், கருணாநிதிக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் அடிக்கடி விசாரித்துவரும் அழகிரி, தன் நண்பரான மருத்துவர் உதவியுடன் லண்டன் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால், விரைவில் லண்டன் டாக்டர் வரவழைக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் பெற அவர் ஏற்பாடுகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கருணாநிதியை லண்டனுக்கு அழைத்துச் சென்று அங்கேயே சிகிச்சை பெறலாம் என்ற யோசனையும் முன்வைக்கப் பட்டதாம்.




