நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்து வரும் சாரல் திருவிழா கடந்த 28 ம் தேதி தொடங்கியது. இந்த சாரல் திருவிழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், சாரல் திருவிழாவின் 6வது நாளான இன்று சமூக நலத் துறை சார்பில் கோலப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடந்தது.
முதலாவதாக நடந்த கோலப்போட்டியில்
ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். சுற்றுச்சூழல், தண்ணீர் சிக்கனம் மற்றும் தேச பக்தியை வலியுறுத்தும் பல்வேறு விதமான கோலங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தது.
இதில் முதலாவதாக தூத்துக்குடியை சேர்ந்த பாகம்பிரியாள், இரண்டாவதாக சொக்கம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மணி, மூன்றாவதாக ஆயிரப்பேரியைச் சேர்ந்த காளியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, ஊட்டத்திறன் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் கொழு, கொழு குழந்தைகளுக்கான போட்டிகள் நடந்தது.
இப்போட்டியில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான
ஊட்டத்திறன் தொடர்பான
ஆலோசனைகளை பெற்றோர்களிடம்
தெரிவித்தனர்.
இந்த போட்டியில் முதலாவதாக பூலாங்குடியிருப்பை சேர்ந்த கவின், இரண்டாவது இடம் குற்றாலம் கதிர் வேல், 3 வது இடம் கடையநல்லூர் கவின் சஞ்சய் ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.



