கோவை: வீட்டிலேயே இனிய சுகப் பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் திருப்பூரில் வீட்டிலேயே சுகப் பிரசவம் பார்த்துக் கொள்வதாகக் கூறி, ஒரு பெண் உயிரிழந்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கோவை மாட்டத்தில் வீட்டில் வைத்தே பிரசவம் பாா்க்கலாம் என்று கூறி, வரும் 26ஆம் தேதி கோவை மாவட்டம், கோவை புதூா் பகுதியில் ஒரு நாள் இலவச பயிற்சி வழங்கப்படும் என்று, தனியாா் அமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில், இனிய சுகப் பிரசவம் ஒரு வரம்; மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் மருத்துவரிடமும் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து பயிற்சி வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதைத் தொடாந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக, வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம் என்று விளம்பரப் படுத்தியதாக, ஹீலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டிலேயே பிரசவம் என்ற விளம்பரங்கள் தொடர்பாக மருத்துவா்கள் கூறுகையில், தனியாா் அமைப்புகள் கூறும் இது போன்றவற்றை நம்பி விபரீத முயற்சிகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




