சென்னை: விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ரூ 400 கோடி சுருட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். இவர் தற்போது பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க, மறு கூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருப்பதாகவும், ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்துள்ளதாகவும், இதற்கு, அண்ணா பல்கலைக் கழகத்தில் 2015-2018 வரை தேர்வுத் துறைக் கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
உமாவுக்குக் கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டிருப்பதாகவும், முறைகேட்டில் ஈடுபட்டது உண்மை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.





