மதுரை மாவட்டம், கடச்ச நேந்தல் கோல்டன் சிட்டி அருகே 47 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடச்சநேந்தல் பகுதியில் இன்று காலை ஆடு மேய்க்க வந்தவர்கள், மேய்ச்சல் நிலத்தில் ஆங்காங்கே மயில்கள் செத்துக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து போலீஸாருக்கும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
மயில்கள் இறந்து கிடந்த பகுதியை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பகுதியில் நெல் குவியல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. அதில் விஷம் கலந்து யாரோ வைத்திருக்கிறார்கள் என சந்தேகப் படும் வனத்துறையினர் மயில்களை உடற்கூறாய்வு செய்த பின்னர்தான் உண்மை தெரியவரும் எனக் கூறியுள்ளனர்.
40-க்கும் மேற்பட்ட மயில்கள் ஒட்டுமொத்தமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயப் பயிர்களைக் காப்பதற்காக பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தும் விவசாயிகள், அவற்றால் வன விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.




