சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது. இதை அடுத்து நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய கனிமொழி பின்னர் நள்ளிரவில் மீண்டும் தனது தாயார் ராசாத்தி அம்மாளுடன் மருத்துவமனைக்குத் திரும்பினார்.
காவேரி மருத்துவமனையில் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி நேற்றிரவு முழுவதும் தங்கியிருந்து கருணாநிதி உடல்நலத்தை கவனித்தனர். நேற்றிரவு முதல் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்த கனிமொழி, தற்போது வீட்டுக்கு புறப்பட்டார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 11ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கையில் நேற்று தெரிவிக்கப்பட்டது
இதனிடையே இன்று பிரதமர் மோடி காவேரி மருத்துவமனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க இன்று பிரதமர் மோடி காவேரி மருத்துவமணைக்கு வரவுள்ளதால் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காவேரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள்.
இரவு வீட்டிற்கு சென்று இருந்த தொண்டர்கள் மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.




