சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்துவிட்டதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உடல் இயங்குவதாகவும், வயதின் தன்மை காரணத்தால் உடல் உறுப்புகள் செயல்பட மறுப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதை அடுத்து, காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தி.மு.க தொண்டர்கள் பெரிதும் சோகம் அடைந்தனர். மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தொண்டர்களில் சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
நேற்று எழுந்து வா தலைவா என்று கோஷமிட்டு, பாடல்களைப் பாடி உற்சாகப் படுத்திய தொண்டர்கள், இன்று மருத்துவமனை அறிக்கையையும், திமுக., தலைவர்களின் அவசர செயல்பாடுகளையும் நடமாட்டத்தையும் கண்டு பெரிதும் சோகம் அடைந்தனர். குறிப்பாக, துரை முருகன் அழுது கொண்டே மருத்துவமனைக்குள் சென்றது அவர்களுக்குள் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே கருணாநிதி மகள் செல்வி கதறிக் கொண்டே கோபாலபுரம் இல்லத்துக்குள் செல்வதையும் பார்த்து தொண்டர்களும் கதறி அழத் தொடங்கினர். திமுக., பெண்கள் சிலர் உணர்ச்சி வேகத்தில் பெருங்குரல் எடுத்து கதறினர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனை முன்பாக அனைவரும் பலமாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களில் பலர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





