சென்னஈ: தமிழகத்தில் கடந்த இரு தினங்களில் மக்களிடையே ஏற்பட்டிருந்த பதற்ற நிலை, ஒருவாறு தணிந்து போனது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நாட்கள் நகர்ந்தன. இதற்கு, காவல் துறையின் திட்டமிட்ட முன்னேற்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்தான் காரணம் என்று பரவலாக பாராட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
திமுக தலைவர் கருணாநிதி மரண நிகழ்வில் அனைத்து அரசு ஊழியர்களும், விடுமுறை தினம் என வீட்டில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கும் போது, காவல்துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கியும், வியர்வையில் நனைந்தும், உணவு உண்ணாமலும், பல்வேறு துயரங்களை அனுபவித்துக்கொண்டும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக பாதுகாப்பு கொடுப்பதற்கு தமிழக காவல்துறைக்கு நிகர் யாரும் இல்லை… காவல் துறை நண்பர்களின் பணி அளப்பரியது. என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் முன்வைக்கப் படுகின்றன.
அடுத்தது அமுதா, IAS . கருணாநிதி நல்லடக்க நிகழ்ச்சிப் பொறுப்பாளர். மிகச் சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என புகழ்கின்றனர்.
கருணாநிதி நல்லடக்கத்தின் போது ஸ்டாலின் அவர்களுடன் வெள்ளை சுடிதாரில் சுறுசுறுப்பாக சுற்றி வந்தவர். கிடைத்த நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தேவையானதை உடனடியாக பொறுப்பாக செய்தார். கூடவே கருணாநிதியின் ஒவ்வொரு உறவினர்களிடமும் கருத்தறிந்து அதன்படி செய்தது பலரைக் கவர்ந்தது. இறுதியாக அவரும் ஒரு பிடி அள்ளிப் போட்டது நெஞ்சை நிறைத்தது என சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.




