சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரமிட் சாய்மீரா நிறுவனம் முன்னர் தொடர்ந்த வழக்கில், 2008ஆம் ஆண்டு மர்மயோகி திரைப்படத்துக்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்ததாக குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் புதிதாக ஒரு மனுவை சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்தது. அதில், கமல்ஹாசனுக்கு சம்பளமாகக் கொடுத்த தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.5 கோடியே 44 லட்சம் எங்களுக்கு திருப்பி அளிக்காமல், விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை விதிக்க வேண்டுமென கோரப் பட்டிருந்தது.
இதற்கு கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மர்மயோகி படத்தை எழுதி இயக்கி நடிக்க ரூ.4 கோடி முன்பணம் பெற்றதாகவும், அந்தத் தொகை முழுதும் படத் தயாரிப்புக்காகவே செலவு செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், தொடர்ந்து மீதத் தொகையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் தராததால், படத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்டது.
இதை அடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தர், கமல்ஹாசனின் பதில் மனுவை ஏற்று, விஸ்வரூபம்-2 திரைப்படத்திற்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்தார்.




