சென்னை: நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கொடியேற்றுகிறார். இதில் அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதனால் கோட்டை கொத்தளத்தைச் சுற்றிலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் ஐந்தடுக்குகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் களமிறங்கியுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரையிலான காமராஜர் சாலையிலும், கொடிமரச் சாலை, போர் நினைவுச் சின்னம் முதல் இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலான ராஜாஜி சாலையிலும் நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அடங்கிய ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையை தீவிரப் படுத்தியுள்ளனர். விடுதிகளில் தங்கும் நபர்கள், சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியுள்ள நபர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.





