ஆந்திர துப்பாக்கிச் சூடு: கருணாநிதி கண்டனம்

சென்னை: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியிலே, செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது. கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது பற்றி இரண்டு மாநில அரசுகளும் கலந்து பேசி அதற்கோர் முடிவு காணாத காரணத்தால் இன்றைக்கு இருபது பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இனியாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரண்டு மாநில அரசுகளும் முயற்சி எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு என் ஆறுதலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு மாநில அரசுகளின் சார்பில் உடனடியாக உதவித் தொகை வழங்கிடவும் ஆவன செய்ய வேண்டு மென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.