சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது புகழ்பெற்ற பாலியம்மன் திருக்கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தீமிதி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்தக் கோயில் தீமிதி விழாவில் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பெருமளவில் திரண்டு, மஞ்சளாடை உடுத்தி, தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.
இந்த நிலையில், நேற்று இரவு பாலியம்மன் கோயில் தீமித் திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீ மிதித்துச் சென்றனர். அப்போது அயனாவரத்தைச் சேர்ந்த கதிரவன் என்பவர் தீயில் திடீரென கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அங்கே பிரத்யேக தீக்கவச ஆடைகளுடன் தயாராக காத்திருந்த தீயணைப்பு வீரர்கள், நெருப்புக் கனலில் விழுந்த கதிரவனை மீட்டனர். அவர் வலியால் துடித்தார். உடனே அவரை மீட்டு முதலுதவிக்கு ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரும், தீ மிதிக்கும் போது கால் இடறி விழுந்து படுகாயமடைந்தார். கதிரவன் 77 சதவித தீக்காயத்துடனும், மனோகரன் 88 சதவீத தீக்காயத்துடனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




