சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்த இருவரையும், சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையில் இருந்து விடுவித்து தீ்ர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம், வடகரையை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவரது மனைவி டாக்டர் நூர்ஜமீலா. கடந்த 1992 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக நாகூர் மீரான் இருந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
அப்போது முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான், அவரது மனைவி நூர்ஜமீலா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.33.72 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக, தனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2.12.1999 அன்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில் தங்களின் வருமானத்திற்கான ஆவணங்களை போலீஸ் தரப்பில் சரிவர பரிசீலிக்கவில்லை. அதை கவனிக்காமல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, எங்களுக்கு தனி நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே சிறை தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாகூர் மீரான், நூர்ஜமீலாவின் ஆகியோர் மனு ஏற்கப்படுவதாகவும், இருவரின் சிறைத் தண்டனையும் ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தார்.




