
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியவில்லை. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. கல்வியில் இம்மாவட்டம் பின் நோக்கி செல்கிறது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் கற்பித்தல் குறித்த வலுவூட்டல் பயிற்சியில் வேதனை பேச்சை வெளிப்படுத்தினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து வலுவூட்டல் பயிற்சி நடைபெற்றது
மாவட்டத்திலுள்ள மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் உதவி தலைமை ஆசிரியர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் ராமன் துவங்கி வைத்தார்.
இம்முகாமில் சென்னை வானொலி நிலையத்தின் இயக்குநர் பழனிசாமி கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான புத்தாக்க பயிற்சிகளையும் நல்ல மாணவர்களை உருவாக்குதல் எல்லோருக்கும் எவ்வாறு கல்வியை கற்றுத்தருவது பின் தங்கிய மாணவர்களை எவ்வாறு தேர்ச்சி பெற செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அவர் அளித்தார்,
முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை பொதுமக்கள் சேர்க்க முன் வருவது கிடையாது இதற்குக் காரணம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லை. மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அப்பள்ளிகளை மூடுகிறோம். சரியான நேரத்தில் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்த வேண்டும். தேர்ச்சி சதவிகிதத்தில் இந்த மாவட்டம் மிகவும் பின் தங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியரும் கல்வித்துறையினரும் பல பள்ளிகளில் ஆய்வு நடத்தினோம் இதில் 6,7,8,9 வகுப்புகளில் மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கு படிக்கவும் தெரியவில்லை எழுதவும் தெரியவில்லை! இந்த நிலை இருந்தால் எப்படி மாணவர்கள் முன்னேற்றமடைவார்கள்?! இங்குள்ள தலைமை ஆசிரியர்க்ள் உதவி தலைமை ஆசிரியர்கள் கடமைகளை உணர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீங்கள் கல்வி போதிக்க வேண்டும்” என்று பேசினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் சரியில்லை அதற்கு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்! மாணவர்களுக்கு படிக்கக் கூட தெரியவில்லை என உண்மையை பேசியது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரையும் அதிர வைத்தது!



