சேலம்: மேட்டூர் அருகே, திருமண நிகழ்வில் தாலி கட்டி முடித்ததும், மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகினர்.
ஈரோடு- பவானியை அடுத்த மயிலம்பாடியைச் சேர்ந்தவர் சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு வயது 35. பல இடங்களில் பெண் தேடியும் அவருக்கு திருமணம் செய்ய சரியான பெண் அமையவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருந்தார் சரவணன்.
இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் தரகர் ஒருவர் மூலம் சேலம் மாவட்டம் கொளத்துார் பகுதியில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது. வயது வித்தியாசம் இருமடங்காக, அதிகமாக இருந்த போதிலும், பழனிசாமி தனது 17 வயது மகளை திருமணம் செய்து தருவதாகக் கூறினார். இதனால் மகிழ்ந்த சரவணன் குடும்பத்தினர், திடீர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
சத்யா நகர் அருகே நாகேஸ்வரி அம்மன் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் பெண்ணுக்குத் தாலி கட்டினார் சரவணன். அப்போதுதான் பெண்ணின் வயிறு சற்று உப்பி பெரிதாக இருப்பதை கவனித்துள்ளார். இது குறித்து சரவணன் சந்தேகத்துடன் பழனிசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதால் அப்படித் தெரிகிறது என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், திருமணம் எல்லாம் முடிந்து இரு வீட்டாரும் அந்த இடத்தை விட்டுப் புறப்படும் நேரத்தில், பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரின் அலறல் சத்தம் தாங்க முடியாமல் உடனே ஆம்புலன்சில் ஏற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணைக் கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், இன்னும் சில மணி நேரத்தில் இந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிடும். உடனே பிரசவ வார்டுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த விவரத்தை அறிந்த மணமகனும் அவரது வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பெண் வீட்டார் தன்னை ஏமாற்றி விட்டதாக சரவணன் ஆவேசப் பட்டுள்ளார். இதை அடுத்து, தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, தங்கள் கிராமத்துக்கே அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து பெண் வீட்டார் கூறியபோது, தங்களுக்கே இது தெரியாது என்று கூறி, பின்னணியைக் கூறியுள்ளனர். அந்தப் பெண் ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரும் பெற்றோரும் திருநெல்வேலியில் தங்கி யூகலிப்டஸ் மரம் வெட்டும் பணி செய்துள்ளனர். அப்போது, அவர்களுடன் கருங்கல்லூரைச் சேர்ந்த ஒருவர் தங்கியிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தொடர்பில் அவர் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், குழந்தை பிறந்த பின்பே தங்களுக்கு இந்த விவரம் தெரிய வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், இந்தப் பெண் 18 வயது நிரம்பாத சிறுமி என்பதால் அவரை திருமணம் செய்த மணமகன், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்து கரு உருவாகக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் சிலர் கூறியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர் கொளத்துார் போலீசார்!




