நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் காமராஜ். அப்போது அவரிடம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும், அதன்படி நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.
மத்திய அரசு நெருக்குதல் கொடுத்ததால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாக முன்னர் செய்திகள் பரவின. அதனைக் குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ், அதில் உண்மை என்று கூறி மறுத்தார்.
மத்திய அரசு நெல் கொள்முதலுக்கு கூடுதல் விலையை அறிவித்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் கூடுதல் விலையில் நெல் கொள்முதல் செய்யப் படும். அது அக்டோபரில் இருந்து நடைமுறைக்கு வரும். அடுத்த மாதம் முதல், புதிய விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படும். எனவே, கிடங்குகளில் பராமரிப்புப் பணிக்காக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நெல் கொள்முதல் நிறுத்தப்படுவது வழக்கமானதுதான் என்றார் அமைச்சர் காமராஜ்.




