ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசும் ஆளுநருமே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அவர்கள் 7 பேரையும் இன்றே விடுவிக்க வேண்டும் என பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவர் இது குறித்து வெளியிட்ட செய்தியில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்து 161ஆவது பிரிவின்படி தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 7 தமிழர்களும் எதிர்கொண்டு வரும் இருள் நிறைந்த பாதை முடிவடைந்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 3 முறை அறிவுறுத்தியும் அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. 7 தமிழர்களும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் சிறைகளில் வாட வேண்டும் என்பது தான் மத்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. அதை முறியடித்து 7 தமிழர்களுக்கும் உச்சநீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை உடனடியாக பெற்று, இன்று மாலையே அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப வேண்டும். தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு ஆளுனர் மாளிகையில் நிலுவையில் இருப்பதால் அவற்றின் அடிப்படையில் 7 தமிழரையும் விடுதலை செய்து ஆளுனர் ஆணையிட வேண்டும்… என்று கேட்டுக் கொண்டுள்ளார் .




