
சென்னை: சிபிஐ சோதனை, சோபியா விவகாரம் ஆகியவை குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று ரஜினி காந்த் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரிடம், தற்போதைய நாட்டு நடப்பு, சூழல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் விமானப் பயணத்தில் குரல் கொடுத்த பெண் சோபியா விவகாரம் குறித்தும், குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவது குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு, இவை குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று நழுவிக் கொண்டார் ரஜினி காந்த்.
சென்னை குன்றத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றார் அபிராமி என்ற பெண். இந்நிலையில் அபிராமியின் கணவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.
போயஸ் கார்டன் இல்லத்துக்கு விஜய்யை நேரில் அழைத்து, அவரை சந்தித்த ரஜினி, அவரது கைகளை பற்றி ஆறுதல் கூறினார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் விஜய் என்பதும், தனது இரு குழந்தைகளை நடிகர் ரஜினியைப் போல் வசனம் பேச வைத்து, ஸ்டைல் செய்து, அவற்றை வெளியிட்டிருக்கிறார் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.



