சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக., மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 பேர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இது தவிர அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவிமயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்!
ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க. அரசை ஒருபோதும் அனுமதியோம்!
வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்!
காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும்; கடலில் வீணே கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை !
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்க!
பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து,10ஆம் தேதி நடைபெறும் “பாரத் பந்த்” வெற்றி பெற ஒத்துழைப்போம்!
குட்கா ஊழலில் கொழித்த அமைச்சரை “டிஸ்மிஸ்” செய்க! டி.ஜி.பியைப் பதவி நீக்கம் செய்க!
ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி தி.மு.கழகத்தின் சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதுமென்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




