
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த சாமளாபுரத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து பெண் ஒருவர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தங்களுக்குப் பிரந்த இரண்டரை வயதுக் குழந்தையை உணர்ச்சி வேகத்தில் தாய் தமிழ் இசக்கியே கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த மங்கலம் போலீசார், தமிழ் இசக்கியைக் கைது செய்துள்ளனர்.
சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கட்டிலில் உடல் முழுவதும் ஈரத்துடன் அவரது இரண்டரை வயது மகள் சிவன்யா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் அழுது கொண்டிருந்த அவரது மனைவி இசக்கியம்மாளிடம் விசாரித்த போது அவர் பதில் கூற மறுத்துள்ளார்.
இதை அடுத்து அவர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ் பெண்கள் பலருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் இது இசக்கியம்மாளுக்கு பிடிக்காமல் போகவே, இசக்கியம்மாள் அடிக்கடி நாகராஜுடன் சண்டையிட்டதும் தெரியவந்தது.
தனது பேச்சை கணவர் கேட்காத கோபத்தில், சிவன்யாவைக் கொலை செய்ததாக இசக்கியம்மாள் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இசக்கியம்மாளிடம் குழந்தைக் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



