ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கு இன்று நடைபெறவிருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மணப் பெண் திடீரென காணாமல் போனார். இந்நிலையில் தோழி வீட்டுக்கு தப்பிச் சென்ற மணப்பெண், தன்னைவிட 20 வயது மூத்தவரான எம்எல்ஏ., ஈஸ்வரனுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி செய்கிறார்கள் என்றும், தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறி, அதனாலேயே தான் தோழியின் வீட்டிற்கு வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்று முடிவானதால், குறித்த தேதியில் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்விக்க முயன்றனர். இந்நிலையில் உறவினர் பெண் ஒருவரைப் பார்த்துப் பேசி, அவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
ஆனால், அந்த உறவுப் பெண்ணுடனும் இன்று நடைபெற இருந்த திருமணத்தை ஜாதகம், சூழ்நிலை என்று கூறி, கடைசி நேரத்தில் ஒத்திவைத்துள்ளனர். அடுத்த மாதம் குரு பெயர்ச்சி வருவதால், குரு பெயர்ச்சிக்குப் பிறகு ஈஸ்வரனுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று கூறி, அப்போது திருமணத்தைச்செய்யலாம் என பெரியவர்கள் கூறியுள்ளனர். இதை அடுத்து, இன்று நடைபெறவிருந்த எம்.எல்.ஏ., ஈஸ்வரனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





