சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக அமைக்கப்பட்டு வரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மாதிரி சிலையை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டார் .
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு கிராமத்தை சேர்ந்த தீனதயாளன் என்ற சிற்பி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவ வெண்கல சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் முதற்கட்டமாக களிமண் படிமத்திலான சிலை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், முக தமிழரசு, கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த மாதிரி சிலையில் சிறு சிறு மாற்றங்கள் செய்ய கனிமொழி சிற்பியிடம் தெரிவித்தார். கருணாநிதி இறந்த நூறாவது நாளில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெண்கலத்தால் செய்தே நிறுவப்பட உள்ளது. .
ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திரு உருவச் சிலையும் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் சிலைகளையும் கலைஞர் கேட்டு கொண்டதின் பேரில் இவர் வடிவமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், குட்கா வழக்கு குறித்து ஓராண்டாக வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓராண்டாக குற்றங்களின் தடயங்களை மறைத்து விடுவார்கள் என காவல்துறைக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினார்.
சிபிஐ விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிக்கையில் என்ன தெரிவிக்கிறார்கள் என பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.




