தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஜுலை ஒன்றாம் தேதி முதல் கூடுதல் தவணையாக இரண்டு சதவீதம் அளித்து, தற்பொழுதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்!
இந்த அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 157 ரூபாய் முதல் 2250 ரூபாய் வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் பேர் பயனடைவர்.
இந்த கூடுதல் அகவிலைப்படி ஜூலை, ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக 1157 கோடி ரூபாயாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.




