திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த பஞ்சாயத்து ரெடி… என்றுதான் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்திட்டு மகிழ்கிறார்கள். காரணம், பிரியாணிக் கடை முதல் பேன்ஸி ஸ்டோர் வரை தொடருகின்ற திமுக., நிர்வாகிகளின் அராஜகம்தான்..!
பிரியாணிக் கடை, பியூட்டி பார்லர், அடுத்து பேன்ஸி ஸ்டோர் என திமுகவினர் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
லேட்டஸ்ட் தாக்குதல் இது. இனியும் இருக்கலாம். திருவண்ணாமலை அருகே ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை திமுகவினர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தானிப்பாடியில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வரும் ராஜேஷை, திமுக.,வைச் சேர்ந்த பூபாலன், பவுன்குமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியதுடன், செருப்பால் அடித்துள்ளனர்.
இதுதொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திமுக.,வினரின் தாக்குதலால் மனமுடைந்த ராஜேஷ் அவமானம் தாங்க முடியாமல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
இதை அடுத்து, அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்பாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, திமுக., தலைவர் ஸ்டாலின், தாம் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், கட்சி நிர்வாகிகளின் கட்டப் பஞ்சாயத்துக்களால் ஏற்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க பஞ்சாயத்துக்கு செல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.




