நெல்லையில் அடுத்த 14 நாட்களுக்கு தினமும் 9 மணிநேரம் மின்சாரம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் 14 நாட்களுக்கு பகலில் மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு வுலைகள் உள்ளன. முதலாவது உலையில் நீண்ட நாட்களாக உற்பத்தி இல்லை. இரண்டாவது உலையில் செப்.13ல் உற்பத்தி துவங்கியது. நேற்று மாலை மீண்டும் உற்பத்தி நிறுத்தப் பட்டது.
தூத்துக்குடியில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அலகுகள் உள்ளன. இதில் இரண்டாவது உலை மூடப்பட்டுவிட்டது. நிலக்கரி தட்டுப்பாட்டால் உற்பத்தி நடக்கவில்லை என்று புகார் எழுந்தது. தற்போது காற்று குறைந்து வருவதால் நெல்லை, கன்யாகுமரி மாவட்ட காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது.
இதனால் தென்மாவட்டங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. திருநெல்வேலி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ண ராஜ் அறிவிப்பில், செப்.24 முதல் அக்.7 வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன. இதனால் நகர்ப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
14 நாட்களில் மொத்தம் 126 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிவரை 14 நாட்கள் மின்சாரம் இருக்கப்போவதில்லை என்பது மின்சார வாரியத்தின் அறிவிப்பாகும்.
மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளன. அரசு அலுவலகங்கள் உள்ளன. இவ்வளவு நீண்ட நேர மின்வெட்டு மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, தாமிரபரணி புஷ்கரத்துக்கு நெல்லை தயாராகிக் கொண்டிருக்கும் போது, இது போன்ற அறிவிப்புகள், பக்தர்களை பல்வேறு வழிகளில் சிந்திக்க வைத்துள்ளது. ஏதோ நெருக்கடி கொடுக்கப் படுவதாகவே நெல்லை மக்கள் கருதுகின்றனர்.




