ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்று விட்டு நடமாடிய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மனைவி பூமதி இறப்பதற்கு முன் பேசிய வீடியோவால் கணவர் கார்த்திக் சிக்கினார். கார்த்திக் தீ வைத்ததில் மனைவி பூமதி, 5 வயது குழந்தை நிலா ஆகியோர் இறந்தனர், மற்றொரு குழந்தை பூவரசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் போர்வெல் லாரி ஓட்டுனர் கார்த்திக். இவருக்கும் பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா, பூவரசன் என இரு குழந்தைகள்.
மது போதைக்கு அடிமையான கார்த்திக், தினமும் குடித்து விட்டு பூமதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். கடந்த 19ஆம் தேதி பூமதி குழந்தைகளுடன் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை காப்பாற்றச் சென்ற தனக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் கார்த்திக் அக்கம் பக்கத்தினரிடம் கூறியதால், இதனை தற்கொலை முயற்சி என போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந் நிலையில், இன்று காலை பூமதி, ஐந்து வயது குழந்தை நிலா இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதற்கு முன்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமதி, தன்னையும் குழந்தைகளையும் கணவர் கார்த்திக்தான் மது போதையில் தீ வைத்து எரித்ததாக அவரது சகோதரரிடம் கூறியுள்ளார். இதனை அவரும் பதிவு செய்துள்ளார்.
இதை அடுத்து, இந்தப் பதிவையே மரண வாக்குமூலமாகப் பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, மனைவி, குழந்தைகளை எரித்த கார்த்திக்கிடம் நடந்த உண்மையைக் கூறுமாறு விசாரித்துள்ளனர்.
அதன்படி, அன்று வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்த கார்த்திக், பூமதியை உடலுறவுக்கு அழைத்ததாகவும், குழந்தைகளை இருப்பதால் தன்னால் இயலாது என பூமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், மூவரும் தூங்கிய பின் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளான்.
இதை அடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




