November 8, 2024, 8:42 PM
28.3 C
Chennai

கறார் காட்டும் கலெக்டர்! நெல்லைவாசிகளுக்கு புஷ்கரம் அம்போ! தைப்பூச மண்டபத்தில் தொங்குது ரெட்டைப் பூட்டு!

திருநெல்வேலி: வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வான தாமிரபரணி புஷ்கரத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியும் இடர்ப்பாடும் நெல்லையில் தொடரத்தான் செய்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் இந்து இயக்கங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்து ஆட்சியரிடம் பேசிச் சென்றும், முன்னர் அறிவித்த நிலையிலேயே குறுக்குத் துறையும் தைப்பூச மண்டபமும் தடைப் பட்டியலில் தொடர்கின்றன. இது நெல்லைவாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சியை ஒட்டி வரக் கூடிய தாமிரபரணி மகாபுஷ்கர நிகழ்வுக்காக, கடந்த ஓராண்டுக்கு மேலாகவே ஆன்மிக அமைப்புகள், ஆன்றோர்கள் கடும் முயற்சி எடுத்து ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். ஆட்சியர் தலைமையில் ஒரு ஒருங்கிணைப்புக் கூட்டமும் போடப் பட்டு, ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.

ஆனால், புஷ்கர நிகழ்வுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், திடீரென்று நெல்லையின் மிக முக்கிய படித்துறைகளான தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை இரண்டையும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது மாவட்ட நிர்வாகம். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.