சென்னை: சிலைக் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மீது பொன் மாணிக்க வேல் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா. இவர் அரவிந்த்சாமி நடித்த “மின்சார கனவு” படத்தில் நடித்தவர். இவர் உடைகள் ஏற்றுமதி தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பது தொடர்பாக சிலை கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளன் தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் பொன். மாணிக்கவேல் தலைமையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டில் காட்சிப் படுத்தப் பட்டிருந்த 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், ரன்வீர்ஷா வீட்டில் இருந்து 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 22 தூண்களும் அடங்கும்.
இவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தற்காலிகமாக வைக்க உள்ளோம். இங்கு 12 உலோகம், 22 கல் தூண்கள், 56 கல்சிலைகள் என 82 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இங்கு இருக்கக் கூடிய சிலைகள் எல்லாமே தெய்வத்தின் சத்தியமாக இந்து ஆலயங்களில் வைக்கக் கூடிய சிலைகள். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இதன் பரிணாமங்கள் மிகவும் பெரியதாக உள்ளன. இன்னொன்று… இவை பழமையான சிலைகள் அல்ல, தொன்மையானவை. இவை அனைத்தும் கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
ஆனால் இவை எந்தக் கோவிலில் திருடப்பட்டவை என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் இந்தச் சிலைகளை மியூசியத்தில் வைக்க இடமில்லை என்று அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.
எனவே சிலைகளை எங்கே கொண்டு செல்வது என்பது தெரியவில்லை. இதனால் திகைத்து நிற்கின்றோம். இந்தச் சிலைகள் அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு மேலானது.
சிலைகளை பறிமுதல் செய்வதற்கான செலவினங்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. செலவு செய்த பணத்தை திரும்பக் கிடைப்பதில் ஒரு மாதம் மேல் ஆகிறது. கைப்பற்றப்பட்ட சிலைகளில் 75 சதவீதம் தீனதயாளன் விற்றுள்ளார்.
தற்போது கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு 5 லாரிகள் மூலம் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். விற்பனை உரிமம் இல்லாதவரிடம் சிலைகளை வாங்கியுள்ளார் ரன்வீர்ஷா. இவர் யார்-யாரிடம் சிலைகளை விற்றார் என்றும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இந்த சோதனை தொடர்பாக எஸ்பி அசோக் நடராஜன் கூறியபோது, ரன்வீர் ஷா வீட்டில் 22 தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12 உலோகச் சிலைகள் உட்பட 89 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தமிழக கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை தொன்மையான சிலைகள். பலரிடம் இருந்து கைமாறி ரன்வீர் ஷாவிடம் வந்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கலாம்.. என்றார்.





