வேலூர்: திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப் பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு வடக்கு மண்டல ஐஜி.,யிடம் இருந்து அதிரடியாக வேலூர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிசாமி திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலம் சென்ற போது, காட்பாடியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விளக்கம் கேட்டு போலீசாருக்கு வடக்கு மண்டல ஜஜி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். பின் திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக சேலத்திற்கு சென்றார். அப்போது, தமிழக எல்லையான காட்பாடி சில்க்மில் பகுதியில் அதிமுக.,வினர் வரவேற்பு அளித்தனர்.
அங்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சிறிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேடை அருகே முதல்வர் கார் செல்லமுடியவில்லை.
இதனால் சற்று தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு முதல்வரும் காரில் இருந்து இறங்கினார். அப்போது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் முதல்வர் மேடைக்கு செல்லாமல், மீண்டும் காரில் ஏறி சேலம் புறப்பட்டுச் சென்றார்.
தள்ளுமுள்ளு சம்பவத்துக்கு பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் காட்பாடி சில்க்மில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உட்பட 50 போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.




