சென்னை: அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி அழைப்பு எண் 108 முடங்கி, ஒரு மணி நேரம் கழித்து பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி அழைப்பு எண் 108 மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இன்று பிஎஸ்என்எல்., தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதால் 108 அழைப்புக்கான சேவை பிற்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனை 108 சேவை மையத் தலைமையகம் அறிவித்தது.
இதனால், 108 என்ற எண்ணுக்கு பதில் தற்காலிக அழைப்பு எண் என மற்றொரு எண்ணை அறிவித்தது. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் 108 அழைப்பு சேவை மீண்டும் சீரானது. இதை அடுத்து, தற்காலிக எண்ணுக்கு அழைக்க வேண்டாம் என அதன் தலைமையகம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானது.
ஏற்கெனவே இது போன்ற ஒரு தகவலை வாட்ஸ் அப் சமூக வலைத்தள சேவை துவங்கிய காலம் தொட்டே, பலரும் பகிர்ந்து வந்துள்ளனர். எனவே இதனை பொய்யான தகவல் என்று கடந்து செல்வோர் பலர். ஆனால், இன்று அதே போன்ற தகவல் பலரது வாட்ஸ்அப் எண்ணுக்கும் பகிரப் பட்டது. இது பலருக்கும் எரிச்சலை ஊட்டியது!




