
ஆள் கடத்தலின் பின்னணி என்ன என்று விசாரித்து வருகிறது காவல்துறை ! ஐந்து பேர் கைது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்!
போச்சம்பள்ளி மத்தூர் அருகே கார் வாங்கி விற்க்கும் தொழில் புரிந்துவரும் ஸ்ரீதரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகேயுள்ள நல்லப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஶ்ரீதர் என்பவர் கார் வாங்கி விற்க்கும் தொழில் புரிந்து வகிறார்.
இவருக்கும் வேலம்பட்டி அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சாமியார் பெரியசாமி என்பவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்குமுன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் மேலும் சில நண்பர்கள் சேர்ந்து மத்தூர் அடுத்த கூச்சூர் அருகே புதையல் இருப்பதாகவும் அங்கு மூன்று சாமி சிலைகள் மற்றும் இரிடியம் சொம்பு ஒன்றும் இருக்கும் என சாமியார் குறி சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதனை நம்பிய ஸ்ரீதர் புதையலை எடுக்க ஆசைப்பட்டு சாமியாரிடம் கேட்டுள்ளார். அப்போது சாமியார் பெரியசாமி அந்த புதையலை எடுக்க நாகமணி வேண்டும் என்றும் அது பாம்பு வாயில் இருந்து காக்கும் என்றும் அது ஏற்கெனவே தன்னிடம் உள்ளதாகவும் அதற்கு 4 லட்சத்து 5 ஐம்பதாயிரம் செலவாகும் என கூறியுள்ளார்.
இதனை முழுமையாக நம்பிய ஸ்ரீதர் முழு பணத்தையும் சாமியாரிடம் கொடுத்துள்ளார். பின்பு ஒரு நாள் பெரியசாமிக்கு சாமி வந்து நாகமணியை வைத்து புதையல் இருக்கும் இடத்தில் குழி தோண்டி மூன்று சாமி சிலைகள் மற்றும் ஒரு இருடியம் சொம்பு ஆகியவற்றை எடுத்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
புதையல் எடுக்க பூஜை செய்த நாகமணியை புதையலோடு சேர்த்து சில நாட்கள் வைத்திருக்க வேண்டும் எனக் கூறி நாகமணியை பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் மீறி பிரித்து பார்த்தால் அது உன்னை காவு வாங்கி (கொன்று விடும்) விடும் என்றும் கூறி ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் மீறி ஆர்வ மிகுதியால் ஸ்ரீதர் அதைப் பிரித்துப் பார்த்தபோது அது வெறும் ரப்பர் துண்டு என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து சாமியாரிடம் கேட்டபோது உஷாரான சாமியார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து எங்களை நீ ஏமாற்றி பல லட்சங்களுக்கு யாரிடமோ விற்று விட்டாய்… எங்களுக்கு சேர வேண்டிய பங்கை கொடுத்துவிடு என சண்டையிட்டுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த 26ஆம் தேதி பெரியசாமி, சின்னப்பன் இருவரும் சேர்ந்து தன்னை ஆட்கள் வைத்து கடத்தி இருக்கலாம் எனவும் கடத்திய நபர் அடையாளம் தெரியாது எனவும் ஞாயிற்றுக்கிழமை மாலை மத்தூர் காவல் நிலையத்திற்க்கு வந்து தெரிவித்துள்ளார்.
மேலும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து புகார் அளித்தார். பின்னர் துரித விசாரணை நடத்திய ஊத்தக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் விசாரணை மேற்கொண்டபோதுதான் கடத்தப்பட்ட ஸ்ரீதரும் சேர்ந்து சட்டத்திற்க்கு புறம்பாக சிலை கடத்தல் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட போலி சாமியார் பெரியசாமி, சின்னப்பன், சக்திவேல், கோவிந்தராஜ், சரவணன் என ஐந்து பேரை பிடித்து தொடந்து விசாரித்து வந்தனர். இதில் சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து மூன்று வெண்கல சிலைகளையும், பணம் ரூபாய் 1 லட்சம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
மத்தூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் பணம் பெற்றுக் கொண்டு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகக் கூறப்பட்டது. இருப்பினும் இதன் பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உடனடியாக மீண்டும் அனைவரையும் மத்தூர் காவல் நிலையத்திலேயே பணியை தொடர அனுமதித்துள்ளார்.



