சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3-ம் தேதி (இன்று) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால், வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 750 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற நீண்ட தூர விரைவு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. நடைமேடைகளில் முக்கியஇடங்களை தேர்வு செய்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் குறித்து தகவல் அளிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று 1,300 சிறப்பு பேருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். 3, 4 தேதிகளில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து 3-ம் தேதி (இன்று) 1,300 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,575 பேருந்துகளும், 4-ம் தேதி (நாளை) 1,542 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,817 பேருந்துகளும் இயக்கப்படும்.
தீபாவளியையொட்டி அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 233 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.5 கோடியே 81 லட்சத்து 13 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. – என்று அதிகாரிகள் கூறினர்.




