சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சிறு குறு தொழிலகங்கள் அதிகம் உள்ள இடங்களாக, மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவையும் தென்மாவட்டமான விருதுநகரின் சிவகாசியும் விளங்குகின்றன. ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த இந்த நகரங்களில் தற்போது, வேலையிழப்பும் வேலைத் தட்டுப்பாடும் உருவாகிவருகிறது.
குறிப்பாக, சிவகாசியில் பட்டாசுத் தொழிலும் அச்சகத் தொழிலும் மிக முக்கியமான தொழில்களாக அமைந்து, வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கித் தந்தன. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், கல்வி அளிப்பதற்கென கல்விக் கூடங்கள், கல்லூரிகள் என பட்டாசு ஆலை நிர்வாகங்களாலேயே அமைக்கப்பட்டன.
இவற்றில் பெரும்பாலும் நாடார் சமூக மக்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நாடார் சமூக மக்களிடையே கிறிஸ்துவ பிரசாரமும் அதிகம் உண்டு. இந்து நாடார் கிறிஸ்துவ நாடார் என மத ரீதியாக சமூக மக்களைப் பிரித்து வைத்து, தொழில் வாய்ப்புகளை வழங்கியதும் உண்டு. ஆனால், அதிலும் வேட்டு வைக்கும் முகமாக, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே, வெடி வெடிப்பதற்கு எதிராக கிறிஸ்துவ பள்ளிக் கூடங்களில் மாணவர்கள், சிறுவர்களிடம் ஒரு பிரசாரமே நடைபெற்றது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வழக்கு தொடுத்து, இந்த முறை தீபாவளிக்கு 2 மணி நேரமே வெடிகள் வெடிக்கப் பட வேண்டும் என்று கால வரையறை கொடுத்து தீர்ப்பு பெறப் பட்டது. இதை அடுத்து பட்டாசு விற்பனை இந்த வருடம் மிக மந்தமானது. சென்ற வருடம் தயார் செய்து வைத்திருந்த பட்டாசுகளே இந்த வருடத்துக்கும் அடுத்த வருடத்துக்குமே போதுமானதாக இருந்த நிலையில், மேலும் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்த முறை 30 சதவீத பட்டாசுகளே சென்னை தீவுத் திடலில் விற்பனையானதாக கூறப் பட்டது. மதுரை, கோவை என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் பட்டாசு விற்பனை பாதிக்கும் குறைவாக பாதிக்கப் பட்டது.
இந்த நிலையில், வேறு வழியின்றி, 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப் படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏற்படும் வேலையிழப்பை சமாளிப்பது குறித்து அடுத்து அரசும் பட்டாசு ஆலை உரிமையாளர்களும்தான் முடிவு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.




