திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஈஸ்வரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலை, கோவில் கலசங்கள், அம்பாளின் தாலிக்கொடி உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ளது மிகப் பழைமையான ஸ்ரீகுங்குமநாயகி உடனுறை சோமநாத ஈஸ்வரர் ஆலயம். ஊரில் இருந்து சற்று தள்ளி இருக்கும் இந்தக் கோயிலில் இரவு நேரத்தில் ஆலயத்தில் காவலாளி எவரும் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் சுற்றுச் சுவரில் ஏறி உள்ளே குதித்த கொள்ளையர்கள், கோவில் பிரதான சந்நிதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சந்நிதியில் இருந்த ஈஸ்வரன், பார்வதி உத்ஸவர் ஐம்பொன் விக்ரஹங்கள், மூன்று கோபுர கலசங்கள், அம்பிகையின் தாலிக் கொடி, நகைகள் உள்ள்ட்டவற்றையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸார், கொள்ளையர்களின் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்தும் விசாரணைகள், கெடுபிடிகள் எல்லாம் அறிந்திருந்தும், கோயில் சிலைகள் திருடப் படுவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




