கோவில்பட்டி அருகே தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி வந்த லாரியில் தீடீரென தீ பிடித்தது. இதனால் அருகில் இருந்த குளத்தில் லாரியை இறக்கி கவிழ்த்துவிட்டு, அதில் இருந்து குதித்துத் தப்பினார் லாரி டிரைவர்.
.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலமத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் சுகுமார் (32). லாரி டிரைவரான இவர் இன்று கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் தீப்பெட்டி ஆலையில் இருந்து தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றிக்கொண்டு, ராஜஸ்தானுக்கு சென்று கொண்டு இருந்தார்.
லாரி காலாங்கரைப்பட்டியை கடந்து வந்த போது, தீப்பெட்டி பண்டல்கள் மீது மரக்கிளைகள் உரசியுள்ளன. இதில் தீப்பெட்டி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன. இதை கவனிக்காமல் சுகுமார் லாரியை ஓட்டிச் சென்றார். இதனால் சாலையில் தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து கீழே விழுந்து கொண்டே வந்தன.
அப்போது சாலையோரம் நடந்து சென்ற சிலர் பார்த்து, லாரியில் தீப்பிடித்து எரிவது குறித்து அவரிடம் கூறினார். உடனடியாக அவர் லாரியை வானரமுட்டி கோயில் அருகே உள்ள ஆயா ஊருணியில் லாரியை இறங்கி விட்டு, லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.
தகவலறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய முதன்மை தீயணைப்பாளர் முருகானந்தம் தலைமையிலும், கழுகுமலை தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் பொன்ராஜ் தலைமையிலும் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் தீப்பெட்டி பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.