
சென்னையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சென்னை திருவான்மியூர் உள்ள மேற்கு காமராஜர் நகரில் வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார் பார்த்திபன்!
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகளும், ஜூலை மாதம் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த நகைகளும் திருடு போனதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார் பார்த்திபன்.
கடந்த ஏப்ரல் மாதம் திருடு போன 60 சவரன் நகைகளுடன் சேர்த்து, மொத்தம் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளன. இது குறித்து அளித்த புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, திருடு போன நகைகளை மீட்டுத் தாருங்கள் என்று கூறி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளார் நடிகர் பார்த்திபன்!