
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிபர், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, அவரை பதவில் இருந்து நீக்கி, ராஜபட்சவை புதிய பிரதமராக நியமித்தார் மைத்ரீபால சிறீசேன. பின்னர், கடந்த மாதம் 9ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகக் கூறினார். பின்னர், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
அதிபரின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட 13 பேர் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, நவ.13ஆம் தேதி இடைக்கால தீர்ப்பாக, நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு விசாரணைக்கு ஏற்றது.
இந்த அமர்வின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கூறினர். மேலும், அதிபர், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நாடாளுமன்றக் கலைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க மூன்றில் இரு பங்கு எம்.பிகளின் ஆதரவு தேவை என்ற சட்ட விதியினை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இலங்கை அதிபரின் செயல் சட்ட விரோதமானது என்று கூறினர்.
நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடியும் முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று ஒருமித்த கருத்தாகக் கூறினர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.