
சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகின்றன. நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற பண்பை மையமாகக் கொண்டு 10-வதுஆன்மிக சேவைக் கண்காட்சி சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம்.
இதன் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்காட்சியை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.

தொடர்ந்து இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை தலைவரும் தேனி தட்சிணாமூர்த்தி வித்யாபீடத்தின் அதிபதி சுவாமி ஓம்காரானந்தர், தருமபுர இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர், ஆரணி அருகே உள்ள திருமலை சமண மடாதிபதி ஸ்ரீதவள கீர்த்தி சுவாமிகள், கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் அருளுரை வழங்கினார்கள்.

விழாவில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபால்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் புதன்கிழமை இன்று காலை 10 மணி அளவில் ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தில் ‘கோ-கஜ-துளசி வந்தனம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக் கிழமை நாளை பெற்றோர், பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தில் ‘மாத்ரு பித்ரு, அதிதி- ஆச்சார்யா வந்தனம்’ நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி பெண்மையைப் போற்றுதல் என்ற கருத்தில் ‘ சிறுமியரைப் போற்றும் கன்யா வந்தனம்’, ‘ தாய்மார்களைப் போற்றும் சுவாசினி வந்தனம்’ ஆகியவை நடைபெறுகிறது.
பிப்ரவரி 2-ஆன் தேதி சுற்றுச்சூழலை பராமரித்தல் என்ற கருத்தில் ‘கங்கா- பூமி வந்தனம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது, 3-ஆம் தேதி நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற கருத்தில் ‘பாரத மாதா- பரம்வீர் வந்தனம்’ நிகழ்ச்சியும், 4-ஆம் தேதி வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தில் ‘விருட்ச- நாக வந்தனம்’ நிகழ்ச்சியும் நடக்கிறது.
கண்காட்சி வளாகத்தில் தினசரி கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பகல் 3.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையிலும், இரவு 6 மணியில் இருந்து 8.30 மணி வரையிலும் பல்வேறு மாநில கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. ‘மூவர்ணம் மற்றும் வேலுநாச்சியார் வரலாற்று நாட்டிய நாடகம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம்’ நிகழ்ச்சியும், அந்தமான் சிறையை கண்முன்னே நிறுத்தும் அரங்கம், ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் ஒளி, ஒலி காட்சி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.



