திண்டுக்கல் டாக்டரைக் கடத்திக் கொன்ற 3 பேருக்கு இரட்டை ஆயுள்; 5 பேருக்கு ஆயுள்

மதுரை: திண்டுக்கல்லில் ரூ.5 கோடி கேட்டு டாக்டரை கடத்திக் கொன்ற 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் பிரபல டாக்டர் பாஸ்கரன் (72) கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அதிகாலை கிளப்புக்குச் சென்றபோது ஒரு கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர் பாஸ்கரன் மனைவி வனிதாவுக்கு ரூ.5 கோடி கேட்டு கடத்தல்காரர்கள் பலமுறை மிரட்டல் விடுத்தனர். கடத்தல்காரர்கள் கூறியபடி, ரூ.1 கோடி பணத்துடன் திண்டுக்கல் வாழைக்காய்பட்டி பிரிவு அருகே வனிதா சென்றார். பின்னர் அவர் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து வைகை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி சென்றார். ஆனால் போலீசார் பின்தொடர்ந்து வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் பணத்தை வாங்காமல் சென்றுவிட்டனர். பின்னர் மே 8-ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள ஆழியாற்றில் டாக்டர் பாஸ்கரன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர். திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த ஒரு காருக்குள் செல்போனும், ஒரு அரசியல் கட்சித் தலைவரின் படமும் இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரித்ததில் அது கடத்தப்பட்ட கார் என்பதும், செல்போனில் இருந்த சிம்கார்டு மணிகண்டராஜா என்பவரின் பெயரில் வாங்கப்பட்டிருந்ததும் தெரிந்தது. திருச்சி பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்த மணிகண்டராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருச்சி பட்டாலியன் அலுவலகத்தில் விண்ணப்பத்துடன், தனது அடையாள அட்டை நகலைச் சேர்த்துக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பட்டாலியன் சப்-இன்ஸ்பெக்டர் பாலநாகஜோதியிடம் விசாரணை நடத்தி, அவரது வீட்டில் சோதனை செய்தபோது மணிகண்டராஜாவின் அடையாள அட்டை நகல் மட்டும் மாயமாகி இருந்தது. பாலநாகஜோதியின் வீட்டுக்கு வந்த, அவரது உறவினரான திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்பவர், அதைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. கார்த்திகேயனைத் தேடியபோது அவர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில், கார்த்திகேயன் மற்றும் அவரது கூட்டாளிகள் டாக்டர் பாஸ்கரனை கடத்திக் கொலை செய்தது தெரிய வந்தது. அதன் பின்னர் சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரரான கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். கார்த்திகேயனுடன் பழனியை சேர்ந்த உமர் முக்தரும் போலீஸில் பிடிபட்டார். இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய பழனியை சேர்ந்த சபீர்அகமது (22), முள்ளிப்பாடி சங்கர் (25), பழனி முகிலன் (20), கார்த்திகேயனின் காதலி பழனி கல்லூரி மாணவி மஞ்சுபார்கவி (20), உத்தமபாளையம் ராஜ்குமார் (24), திண்டுக்கல் துரைப்பாண்டி (20), தாராபுரம் விவேக் (23) ஆகிய 7 பேர் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின் இறுதிக் கட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை அடுத்து நீதிபதி அளித்த தீர்ப்பில்…. பாஸ்கரன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான கார்த்திகேயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம்; சபீர்அகமது, உமர்முக்தர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆண்டுகள் சிறை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம்; சங்கர், முகிலன், ராஜ்குமார், துரைப்பாண்டி, விவேக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மஞ்சு பார்கவிக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவர்கள் சிறையில் இருந்த காலம்போக, அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மஞ்சு பார்கவி, ஏற்கெனவே ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர் அபராதம் செலுத்தினால் போதுமானது என தீர்ப்பில் கூறப்பட்டது.