காலை நாளிதழ் படித்த போது மாரடைப்பு..! சூலூர் அதிமுக., எம்.எல்.ஏ., கனகராஜ் மரணம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்

kanagaraj sulur mla - 2026

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எம்எல்ஏ கனகராஜ் மரணம் அடைந்ததாகக் கூறப் படுகிறது.

அதிமுக-வின் மூத்த உறுப்பினரும், பல முறை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த கனகராஜ் இன்று காலை 7 மணி அளவில் மரணமடைந்தார். வீட்டில் காலை நாளிதழ் படித்துக் கொண்டு ஓய்வில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், கனகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜூக்கு 64 வயது ஆகிறது. இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மேலும், இவர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். மறைந்த கனகராஜின் உடல் சூலூர் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்ட இவர் சுமார் 35,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், அனைத்து தரப்பினரும் உடனே அணுகும் வகையில் எளிய சட்டமன்ற உறுப்பினராக கனகராஜ் திகழ்ந்தார் என சூலூர் தொகுதி மக்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.