வேலூர்: வேலூர் சிறையில், கைதி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்ததாக நான்கு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) கடந்த 2012ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். நேற்று முன்தினம் சிறைக்குள் இருந்த மணிகண்டன் திடீரென காணாமல் போகவே, அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறை வளாகத்தில் இருந்த கிணற்றில் மணிகண்டனின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அஜாக்கிரதையாக பணியாற்றியதாக துணை ஜெயிலர் காளிதாஸ், உதவி ஜெயிலர் சர்தார்பாஷா, முதன்மை தலைமை வார்டன் நீலகண்டன், தலைமை வார்டன் தங்கமுத்து ஆகிய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று காலை மாஜிஸ்திரேட் வேலூர் மத்தியச் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மணிகண்டனின் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சடலத்தை பெற்றுக் கொள்ள உறவினர்கள் யாரும் முன்வராததால் வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வேலூர் சிறையில் கைதி தற்கொலை: அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari